Wednesday 3 August 2011

இடர் களையும் யக்ஞ விநாயகர்!


ஸ்ரீ யக்ஞ விநாயகர், ஸ்ரீ நீலாம்பிகை ஸமேத சனீஸ்வர பகவான், ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியோர் ஒன்றாகக் குடி கொண்டு அருளாட்சி செய்யும் ஒரு அற்புதத் திருத்தலம்தான் சென்னை மேற்கு மாம்பலம், வெங்கடாசலம் தெருவில் கிழக்குப் பார்த்து அமைந்த “அருள்மிகு சனீஸ்வர-ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆலயம்’ ஆகும்.
ஆதியில் இந்த இடம் “புலியூர் கிராமம்’ என்று வழங்கப்பட்டு, ஒரு ஜமீன் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் ஐயர் என்பவர், மேற்படி ஜமீனிடம் இருந்து சிறிது நிலத்தைப் பெற்றார்; பின்னர் 65 வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் பஞ்ச முக ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார். அதன் பின்னர் திருநள்ளாற்றுக்குச் சென்றார். அங்கு சனீஸ்வர பகவான், நீலாம்பிகை மூர்த்திகளை வடித்துப் பெற்று, இக்கோயிலில் மற்றொரு சந்நிதியில் பிரதிஷ்டை செய்தார்.
மேற்படி வெங்கடாசலம் ஐயர் அவர்கள் பெயரில் இந்தத் தெரு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ காஞ்சி பரமாச்சார்யார் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 1962ல் சென்னைக்கு விஜயம் செய்தபோது இக்கோயிலுக்கு எழுந்தருளியதாகக் கூறுகின்றனர்.
வெங்கடாசலம் ஐயர் காலத்திற்குப் பிறகு பல்வேறு சூழ்நிலை மற்றும் காரணங்களால் கோயிலை நிர்வகிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. பின்னர் இக்கோயிலை, புதியதொரு டிரஸ்டு, சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன் ஏற்றுக் கொண்டுள்ளது. கோயிலைச் செப்பனிட்டு, நித்ய பூஜைகளைச் செவ்வனே நடத்தி வருகிறது.
இந்தக் கோயிலில் விநாயக சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, சனிப்பெயர்ச்சி, ஸ்ரீராம நவமி ஆகிய நான்கு விசேஷங்களை ஒட்டி திருவிழா நடந்து வருகிறது. அந்த உத்ஸவங்களில் திரளான மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, தெய்வ அருளாசி பெறுகின்றனர்.
சனீஸ்வரர்
நவக்கிரஹ நாயகர் சனி பகவான், நவக்கிரஹ மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே அசுர கிரகமாக விளங்குபவர். மானுடராய்ப் பிறந்த அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அற்புத சக்தி படைத்த இவர், அண்டினவர்க்கு அருள் புரியும் வள்ளல்! சூர்ய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த சனி பகவானை “சனைச்சரன்’, “சனீஸ்வரன்’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். காசியில் சிவனை குறித்து கடும் தவம் இயற்றி, லிங்கப் பிரதிஷ்டை செய்து கிரஹ பதவி அடைந்து “சனீஸ்வரன்’ என்ற பெயரை இவர் பெற்றதாகச் சொல்கின்றனர்.
சனி பகவானை “ஆயுஷ்காரகன்’ என ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன. “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. சனியின் பிடியில் சிக்கித் தவிக்காமல் வாழ, இவரை விசேஷமாக வழிபடுதல் அவசியம்.
பஞ்ச முக ஆஞ்சநேயர்
சனியின் பிடியிலிருந்து தப்பியவர்கள் ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ ஆஞ்சநேயரும் என்பது வழக்கு. அதிலும் பஞ்ச முக ஆஞ்சநேயரின் சிறப்பே தனி! தன் பக்தனைக் காக்க உடனே எழுந்தருளிய நரஸிம்ம மூர்த்தியின் அருள், விஷத்தை அடக்கி விரட்டும் கருட மூர்த்தியின் அருள், எதையும் புனருத்தாரணம் செய்து நிலை நிறுத்தும் சக்தி பெற்ற வராஹ மூர்த்தியின் அருள், பக்தர்களின் ஸர்வ மந்திர சுலோக முறையீடுகளையும் சித்தியாக்கும் ஹயக்ரீவ மூர்த்தியின் அருள், ராமநாம ஜெபம் செய்வோரைப் பாதுகாக்க உடன் தோன்றும், சகல சக்தி படைத்த ஆஞ்சநேய மூர்த்தியின் அருள் என இவ்வைந்து மஹா சக்திகளின் வடிவத்தை ஐந்து முகங்களாகக் கொண்டு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேய மூர்த்தியாக அற்புதத் தோற்றத்துடன் திகழ்கிறார். இம்மூர்த்தத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு அழகு!
ஸ்ரீ சனிபகவானுடன், அரச மரத்தடியில் எழுந்தருளிய இந்தப் பஞ்ச முக ஆஞ்சநேயரையும் சேவிப்பதால் சனி தசை, சனி புக்தி, அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்கியம், மன நிம்மதி, காரிய சித்தி, வழக்குகளில் சாதகம், குடும்ப சுகம் ஆகியவை ஏற்படும்.
யக்ஞ விநாயகர்
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, அரச மரத்தடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ யக்ஞ விநாயகர்.
எந்தச் சுப காரியம் என்றாலும் நாம் விநாயகரை துதிக்காமல் தொடங்குவது இல்லை. யாகத்தில் (யக்ஞம், வேள்வி) நாம் அக்னி தேவனையும், இதர தெய்வங்களையும் ஆராதனை செய்யும் முன்னர் விநாயகரை பூஜித்து, சுப காரியங்கள் தடங்கலின்றி நடந்தேறப் பிரார்த்திக்கின்றோம். அதை முன்னிட்டே இங்குள்ள பிள்ளையாருக்கு “யக்ஞ விநாயகர்’ என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. இன்று வரை இவர் சந்நிதியில் அநேக ஹோமங்கள் நடந்து வருகின்றன.
அன்பர்கள் அனைவரும் இக்கோயிலுக்கு வந்து, இம்மூன்று மூர்த்திகளின் அருள் பெற்று மகிழ்வோமாக!
 

No comments:

Post a Comment